சீர் வாசகர் வட்டம்
இருளி
இருளி
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
சனாதன சமூகக் கட்டமைப்பில் சிக்குண்டு பிணவறையை விட மோசமான மலக் குழிகளுக்குள் மூழ்கித் தத்தளிக்கும் அனிதாவின் குரலே இந்நாவல். சாதாரணமாக மனிதர்கள் சுவாசிக்கும் மூச்சுக்காற்று இவர்களுக்கு இல்லை. மலம் இல்லா மண் தரை உறக்கம் இவர்களுக்கு இல்லை. கனவிலும் பின்தொடரும் மலம் அள்ளும் காட்சிகள் காலத்திற்கும் அவர்கள் கண்களில் உறக்கத்தைக் கொடுப்பதில்லை.
அனிதா சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சுமக்கமுடியா கனமான வலிகளால் ஆனது. அதை இந்தக் காகிதங்கள் தாங்கி நிற்பது ஆச்சரியம்தான்.
"ஆம், எங்கள் குடும்பங்கள் பார்க்கும் வேலை தற்கொலையை விடக் கொடுமையான ஒன்று. நாங்கள் சிறுவர்கள்; ஆனால் அவர்கள் மேல் மல வாடை வீசுமென எங்களைப் பெற்றோர்கள் அள்ளித் தூக்கியது இல்லை, அம்மாக்கள் குழந்தைகளுக்கு பாலூட்டியது இல்லை. அதனால் மாரும் கனக்கும் மனமும் கனக்கும். அந்த ஏக்கம் இருதரப்புக்கும் ஆயுட்காலம் முடியும்வரை நீடித்திருக்கும். எங்களில் பலருக்குத் தனித்தனி பெயர்கள் இருந்தும் பள்ளிக்கூட வளாகங்கள் உள்ளும், புறமும் எங்களைப் 'பீ தின்னும் பன்றிகள்' என்றே அழைக்கின்றனர். நாங்கள் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற நேரங்களில் பன்னீருக்குப் பதிலாக எங்கள்மீது மூத்திரங்கள் தெளிக்கப்படுகின்றது. நாங்கள் மல ஈக்கள் மொய்க்கும் பூக்கள்" என அனிதா மூலம் ஆசிரியர் எழுத்தின் ஊடே கடத்தும் வலிகள் மிடுக்காய் திரியும் மேலாதிக்க அரக்கர்களை யார் மனிதர்கள் என்று எள்ளி நகையாடுகிறது.
கடவுளின் பெயரால் காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. மலம் அள்ளும் மக்களின் வாழ்க்கையை அதன் வீச்சத்தோடு சாரோன் உணரச் செய்கிறார். இறுதிப் பக்கம் நெருங்கும் நேரம் சுவாசிக்க முடியா மல வீச்சம் ஆதிக்கத்தின் செவில்களில் பளாரென்று அறைந்து செல்கிறது. மனிதம் என்றால் என்னவென்பதை அறியவேண்டுமெனில் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல் "இருளி".
-பகிரவன்

